Login Form
Invite Friends
| மூன்று அதிசயப் பொருட்கள் (9) |
|
|
|
| Written by kalvithulir |
| Thursday, 09 February 2012 22:49 |
|
தேடித் தேடி அலைந்தேனே
பல மணி நேரம் பறந்ததால் காபூல் கிழவன் களைப்பு அடைந்தான். ஓய்வு எடுப்பதற்காக தகுந்த இடத்தை வானத்தில் பறந்தபடியே தேடினான். பொய்கை சூழ்ந்த அழகிய புல்வெளி ஒன்று அவன் கண்ணில்பட்டது. குதிரையை அங்கே இறக்கினான் அவன்.
அழுதபடியே இளவரசியும் குதிரையிலிருந்து இறங்கினாள். அவன் சொன்ன ஆறுதல் எதையும் கேட்கிற நிலையில் அவள் இல்லை. புலம்பிக் கொண்டே இருந்தாள். அந்தப் புல்வெளி முனிபா நாட்டுத் தலை நகரத்துக்கு அருகே இருந்தது. அந்த நாட்டைக் கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். பொழுது போக்குவதற்காக அவன் தன் வீரர்களுடன் அப்பொழுது அந்தப் புல்வெளிக்கு வந்தான்.
பேரழகியான ஒருத்தி அழுவதையும் அவலட்சணமான கிழவன் ஒருவன் அருகே இருப்பதையும் பார்த்தான்.
அவளைப் பார்த்து அவன், ''அழகியே! இந்த அவலட்சணமான கிழவனுக்கு உன்னை மணமுடித்து இருக்கிறார்களே. உன் பெற்றோர்களுக்கு உன் மேல் அன்பு இல்லையா?'' என்று கேட்டான்.
குறுக்கிட்ட கிழவன், ''அரசே! இவள் என் முறைப்பெண். அதனால் எங்களுக்குத் திருமணம் நடந்தது'' என்றான்.
''அரசே! இவன் சொல்வதை நம்பாதீர்கள். இவன் மந்திரவாதி. சூழ்ச்சி செய்து என்னை இங்கே தூக்கி வந்திருக்கிறான். இதற்கு முன் இந்த அருவருப்பான முகத்தை நான் பார்த்ததே இல்லை'' என்று புலம்பினாள் அவள்.
''வீரர்களே! பொய் சொன்ன இந்தக் கிழவனை மயக்கம் அடையும் வரை அடித்துத் துன்புறுத்துங்கள். அதன்பிறகு சிறையில் அடையுங்கள்'' என்று கட்டளையிட்டான் அரசன்.
''ஐயோ! இப்படி ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே. என்ன செய்வேன்'' என்று நடுங்கினான் கிழவன். அவனை அடித்து உதைத்த வீரர்கள் சிறையில் அடைத்தார்கள். இளவரசி நகாரைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்து சென்றான் அரசன். குதிரையும் பாதுகாப்பாக அரண்மனையில் வைக்கப்பட்டது.
அவள் அழகில் மயங்கிய அவன், ''உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன். பட்டத்து அரசியாக என்னுடன் அரியணையில் அமரலாம். இங்கே செல்வத்திற்குக் குறைவே இல்லை. உன் விருப்பம் போல் மகிழ்ச்சியாக இருக்கலாம். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டான்.
வேடனிடம் தப்பிப் பருந்திடம் சிக்கிக் கொண்டேனே என்று வருந்தினாள் அவள். அங்கே இளவரசன் கமர் காதலியைத் தேடி நாடு நாடாக அலைந்தான். ஊர் ஊராகத் தேடினான். சந்தித்தவர்களிடம் எல்லாம் பறக்கும் குதிரையில் அழகி ஒருத்தியும் கிழவன் ஒருவனும் சென்றதைப் பார்த்தீர்களா? என்று கேட்டான். பலர் அவனைப் பைத்தியம் என்று நினைத்தார்கள். சிலர் அப்படி எதுவும் நாங்கள் கேள்விப்படவில்லை என்றார்கள். பெற்றோர்களுடன் இளவரசி சேர்ந்து இருப்பானோ என்று சானா நாட்டிற்குச் சென்றான். அங்கும் அவளைப் பற்றிய செய்தி எதுவும் கிடைக்கவில்லை.
இருந்தும் அவன் முயற்சியை விடவில்லை. தான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தான். ஓர் இரவு அவன் சத்திரம் ஒன்றில் தங்கினான். பல நாடுகளில் இருந்து வந்த வணிகர்கள் பலர் அங்கே தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர், ''நீங்கள் சென்ற நாடுகளில் ஏதேனும் அதிசயம் உண்டா?'' சொல்லுங்கள் கேட்போம். பொழுது போகும் என்றார்.
அதற்கு இன்னொருவர், ''நான் வணிகப் பொருட்களுடன் முனிபா நாட்டிற்குச் சென்றேன். அந்நாட்டு அரசன் வேட்டையாட சென்றானாம். ஓரிடத்தில் பேரழகி ஒருத்தியும் அவலட்சணமான கிழவன் ஒருவனும் இருந்தார்களாம். அவர்களுடன் தந்தத்தாலான அழகிய குதிரை ஒன்றும் இருந்ததாம்'' என்றார்.
மகிழ்ச்சியால் துள்ளிய இளவரசன் கண்டிப்பாக அவள் இளவரசி நகார் தான் என்று அங்கிருந்து புறப்பட்டான். பல நாட்கள் பயணத்திற்குப் பின் முனிபா நாட்டை அடைந்தான். தலை நகரத்திற்குள் செல்ல முயன்றான். புதிதாக யார் தலை நகரத்திற்குள் நுழைந்தாலும் அவர்களை அரசன் முன் நிறுத்துவார்கள். அரசன் விசாரித்து அனுமதி தந்த பின்தான் நகரத்திற்குள் நுழைய முடியும்.
இது அந்நாட்டு வழக்கமாக இருந்தது. வாயிலில் காவல் இருந்த வீரர்கள் இளவரசனை நிறுத்தினார்கள். மாலை நேரமாகிவிட்டது. இன்று இவனை அரசரின் முன் நிறுத்த முடியாது. இன்றிரவு இவனைச் சிறையில் வைப்போம். காலையில் அரசவைக்கு அழைத்து செல்வோம் என்றான் வீரர் தலைவன்.
அதன்படியே சிறைச்சாலைக்கு அவனை அழைத்து சென்றார்கள். அவனின் பெருமிதமான தோற்றத்தை சிறைக் காவலர்கள் பார்த்தார்கள். இவன் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக வேண்டும். குற்றவாளி போல இவனைச் சிறைக்குள் அடைக்க வேண்டாம். நம்முடன் இரவைக் கழிக்கட்டும் என்று முடிவு செய்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தான் இளவரசன் கமர்.
தன் பேச்சுத் திறமையால் அவர்கள் எல்லோரையும் கவர்ந்தான். இனி அவர்களிடம் எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தான் அவன். பேரழகி ஒருத்திக்கும் உங்கள் அரசருக்கும் திருமணம் என்று கேள்விப்பட்டேனே என்றான். திருமணம் நடந்திருக்க வேண்டியதுதான்.
திடீரென்று அந்தப் பேரழகிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அவளைக் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள். விரைவில் எங்கள் அரசருக்கும் அவளுக்கும் திருமணம் நிகழும் என்றான் ஒரு வீரன். மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டே இளவரசன் கமர் அவளுடன் கிழவன் ஒருவனும் குதிரை ஒன்றும் இருந்ததாகச் சொன்னார்களே என்று இழுத்தான். அந்தக் கிழவன் இங்கேதான் சிறைக்குள் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறான். குதிரை அரண்மனையில் பாதுகாப்பாக உள்ளது என்றான் இன்னொரு வீரன்.
(தொடரும்) |
| Last Updated on Thursday, 09 February 2012 23:04 |



