Login Form
Invite Friends
| மூன்று அதிசயப் பொருட்கள் (5) |
|
|
|
| Written by kalvithulir |
| Wednesday, 18 January 2012 21:52 |
|
இளவரசன் தப்பித்தான்
அடிமை ஒருவனை அழைத்தார் அரசர், ''நீ முதல் அமைச்சரிடம் செல். நாளை காலையில் நம் வீரர்கள் அனைவரும் அரண்மனை முன் அணிவகுத்து நிற்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னதாகச் சொல்'' என்றார்.
அவரை வணங்கிவிட்டு அந்த அடிமையும் அங்கிருந்து சென்றான். அதன்பிறகு அவர் இளவரசன் கமருடன் பேசிக் கொண்டிருந்தார். அவனின் பேச்சுத் திறமையும், நற்பண்புகளும் அவரைக் கவர்ந்தன. அழகான இளைஞனான இவன் நாளை காலையில் சாகப் போகிறான் என்று தனக்குள் வருந்தினார் அவர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல அரியணையில் அமர்ந்தார் அவர். உருவிய வாளுடன் மாவீரனைப் போல இளவரசன் கமர் அரசவைக்கு வந்தான்.
''அவையோர்களே! இந்த இளைஞன் என் மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். நீ மாவீரன் என்பதை நிரூபி உனக்கும் இளவரசிக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன்.
அதற்கு அவன், ''உங்கள் படை வீரர்கள் அனைவரையும் எதிர்த்துப் போர் செய்கிறேன். வெற்றி பெற்றால் இளவரசியைத் திருமணம் செய்து வையுங்கள் என்றான். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். அரண்மனை முன் உள்ள திடலில் இவனுக்கும் நம் வீரர்களுக்கும் போர் நிகழப் போகிறது'' என்றார்.
போருக்கான ஏற்பாடுகள் நடந்தன. அரண்மனை முன் பெரிய விளையாட்டுத் திடல் இருந்தது. அதில் ஒரு பக்கம் எண்ணற்ற வீரர்கள் இருந்தார்கள். இன்னொரு பக்கம் இளவரசன் கமர் நின்றிருந்தான். அரசனும் அவையோர்களும் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து இருந்தார்கள். வேடிக்கை பார்க்க மக்கள் திரளாக அங்கே கூடி இருந்தார்கள். அழகிய இளைஞனான இவன் சிறிது நேரத்தில் கொல்லப்படப் போகிறானே, ,இவன் தப்பிக்க வழி இல்லையே என்று எல்லோரும் வருத்தப்பட்டார்கள். போர் தொடங்கும் நேரம் நெருங்கியது. குதிரை வீரர்கள் அவனை நோக்கி வந்தார்கள்.
''அரசே! குதிரை இல்லாமல் நான் உள்ளேன். உங்கள் வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து இருக்கிறார்கள். இது எப்படி நியாயமான போராக இருக்க முடியும்?'' என்றான் அவன்.
''அரண்மனை லாயத்தில் இருந்து சிறந்த குதிரை ஒன்றைக் கொண்டு வரச் சொல்கிறேன். அதில் அமர்ந்து போர் செய்'' என்றார் அரசர்.
''அரசே! நான் அமர்ந்து வந்த குதிரை அந்தப்புர மேல் தளத்தில் உள்ளது. எனக்கு பழக்கப்பட்ட குதிரை அது. அதை இங்கே கொண்டு வரச் சொல்லுங்கள். அதில் அமர்ந்து போர் செய்கிறேன்'' என்றான் இளவரசன்.
''ம்ம்ம் கண்டிப்பாக இவனுக்குப் பைத்தியம் தான். அந்தப்புர மேல் தளத்தில் குதிரை உள்ளதாக உளறுவானா'' என்று தனக்குள் நினைத்தார் அவர்.
''அடிமைகளே! அந்தப்புர மேல் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கே குதிரை இருந்தால் கொண்டு வாருங்கள்'' என்று கட்டளையிட்டார். சிறிது நேரத்தில் அந்த அடிமைகள் குதிரையைத் தூக்கி வந்தார்கள். இளவரசன் கமர் முன் அதை வைத்தார்கள். தந்தத்தால் செய்யப்பட்ட அந்த அழகான குதிரையை எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள்.
''உன் பொம்மைக் குதிரையில் அமர்ந்து போர் செய்யத் தொடங்கு என்று சிரித்தார் அரசர். ''அரசே! என் குதிரையை நாலா பக்கமும் நான் திருப்ப வேண்டும். அதற்கு நிறைய இடைவெளி வேண்டும். உங்கள் வீரர்களை சிறிது தொலைவில் நிற்க சொல்லுங்கள். நான் குதிரையில் நன்றாக அமர்ந்ததும் குரல் கொடுப்பேன். அதன் பிறகு அவர்கள் என்னுடன் போர் செய்யலாம் என்றான் அவன். இவன் பிதற்றலுக்கு அளவே இல்லையா?'' என்று நினைத்தார் அவர்.
''வீரர்களே! அவன் சொல்வது போலச் செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டார். வீரர்கள் அனைவரும் சிறிது தொலைவில் சென்று நின்றார்கள். குதிரையில் ஏறி அமர்ந்தான் அவன். பறக்க வைக்கும் திருகில் கையை வைத்தான். வேகமாகத் திருகினான். உடனே அந்தக் குதிரை முன்னுக்கும் பின்னுக்குமாக அசைந்தது. வானத்தை நோக்கி வேகமாக பறந்தது. குதிரை பறப்பதைப் பார்த்த அரசர் அதிர்ச்சி அடைந்தார். அவன் தப்பிக்க முயற்சி செய்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது. கோபத்துடன் அவர்
''மடையர்களே! தப்பித்துச் செல்கிறான். அவனைப் பிடியுங்கள்'' என்று கத்தினார். வானத்தில் வேகமாகப் பறந்த குதிரை அவர்கள் கண்களுக்கு மறைந்தது. அங்கிருந்த முதல் அமைச்சர்,
''அரசே! வானில் பறக்கும் பறவையை இங்கிருந்தே கையால் பிடிக்க முடியுமா? அவன் பூதமாக இருக்க வேண்டும். அல்லது மந்திரவாதியாக இருக்க வேண்டும். எப்படியோ அவனிடம் இருந்து அல்லா நம்மைக் காப்பாற்றி விட்டார்'' என்றார்.
அமைதி அடைந்த அரசர் அந்தப்புரம் திரும்பினார். நடந்ததை எல்லாம் தன் மகளிடம் சொன்னார். ''உன் உள்ளங்கவர்ந்தவரை இனிமேல் நான் காண்பேனோ?'' என்று கண் கலங்கினாள் அவள்.
கோபம் கொண்ட அவர், ''அவன் பூதமா மந்திரவாதியா என்பது தெரியவில்லை. அந்தத் திருடனை மறந்து தொலை'' என்று கத்தினார்.
பறக்கும் குதிரையில் பறந்த இளவரசன் கமர் நாட்டை அடைந்தான். அரண்மனை மேல் தளத்தில் குதிரையைப் பாதுகாப்பாக இறக்கினான். அவன் இறந்துவிட்டதாக நினைத்து நாடே சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது.
அவனை உயிருடன் பார்த்த தங்கைகள் மூவரும் மகிழ்ச்சியில் மயக்கம் அடைந்தார்கள். இளவரசன் திரும்பியதை அறிந்த மக்கள் அதை விழாவாகக் கொண்டாடினார்கள்.
(தொடரும்) |
| Last Updated on Wednesday, 18 January 2012 21:58 |



