Login Form
Invite Friends
| மூன்று அதிசயப் பொருட்கள் |
|
|
|
| Written by kalvithulir |
| Tuesday, 10 January 2012 17:59 |
|
முன்னொரு காலத்தில் பாரசீக நாடு பேரரசாக விளங்கியது. செல்வ வளம் மிகுந்த அந்நாட்டை காபூர் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்து வந்தான். ஏழை எளியவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினான். அவன் புகழ் எங்கும் பரவி இருந்தது.
அவனுக்கு அழகும் வீரமும் நிறைந்த கமல் அல் அக்மர் என்ற மகனும் மூன்று மகள்களும் இருந்தார்கள். இளவரசிகள் மூவரும் முழு நிலவைப் போலப் பேரழகுடன் விளங்கினார்கள். அறிவியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான் காபூர். அதிசயமான பொருட்கள் எதைப் பார்த்தாலும் மகிழ்ச்சி அடைந்தான். அதை உருவாக்கியவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாக வழங்கினான். வழக்கம் போல அந்த ஆண்டும் அரசனின் பிறந்த நாள் விழா தொடங்கியது. எங்கும் விழாக்களும் கொண்டாட்டங்களுமாக இருந்தன. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடினார்கள். அரசவை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரியணையில் பெருமிதமாக அமர்ந்து இருந்தான் அரசன். அப்பொழுது நரைத்த மீசையுடன் முதியவர்கள் மூன்று பேர் அங்கு வந்தார்கள். அரசனைப் பணிவாக வணங்கினார்கள்.
அவர்களில் முதலாமவன், ''பேரரசே! நான் துருக்கி நாட்டிலிருந்து வருகிறேன். என் அன்புப் பரிசாக இந்த வீரனின் சிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றான். அந்தச் சிலையைப் பார்த்தான் அரசன். கையில் மேளத்துடன் வீரன் ஒருவன் நிற்பது போல அந்தச் சிலை இருந்தது.
நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அதில் இருந்தன. ''அறிஞரே! இது போன்று ஏராளமான சிலைகள் கருவூலத்தில் உள்ளன'' என்றான் அரசன்.
''பேரரசே! நீங்கள் நினைப்பது போல இது சாதாரண சிலை அல்ல. பேராற்றல் வாய்ந்த வீரன் சிலை. இந்த வீரனை நீங்கள் கோட்டை வாயிலில் காவல் வைத்தால் போதும் இருபத்து நான்கு மணி நேரமும் தூங்காமல் காவல் காப்பான். எதிரி யாராவது வருவது தெரிந்தால் போதும். தன் கையில் உள்ள மேளத்தை அடிப்பான். அதன் ஓசையைக் கேட்டால் எதிரிகள் அஞ்சி ஓட்டம் பிடிப்பார்கள், இல்லையேல் அங்கேயே இறந்து விடுவார்கள்'' என்றான்.
அரசனால் இதை நம்ப முடியவில்லை. ''நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றி வைக்கிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
அடுத்ததாக இரண்டாமவன் ''பேரரசே! நான் சிந்து நாட்டிலிருந்து வருகிறேன்'' என்றான். பொன்னால் செய்யப்பட்ட இருபத்தைந்து மயில்களை அரசனுக்குப் பரிசாக வழங்கினான். அவற்றில் ஒரு மயில் அளவில் பெரிதாகவும் அழகு மிகுந்தும் விளங்கியது.
''அறிஞரே! கிடைக்காத பொருட்களா இந்த மயில்கள்?'' என்று கேட்டான் அரசன். '
"பேரரசே! பெரிய மயில் ஆண் மயில். மற்றவை அனைத்தும் பெண் மயில்கள். பெண் மயில்கள் தோகையை விரித்து அழகாக நாட்டியம் ஆடும்.
ஆண் மயிலோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மயிலோடு கூடிக் குலாவும். ஒரு மாதம் கழிந்ததும் ஆண் மயில் மகிழ்ச்சியுடன் அகவும். அப்பொழுது அதன் வாயிலிருந்து நிலவைப் போல முத்து ஒன்று வெளிவரும். அந்த முத்திற்கு விலை மதிப்பே இல்லை'' என்றான் அவன்.
அரசனால் இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. நீங்கள் சொல்வது போல நடந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது என்றான் அவன்.
''மூன்றாவது முதியவன் பேரரசே! நான் காபூல் நாட்டிலிருந்து வருகிறேன்'' என்றான்.
முழுவதும் தந்தத்தால் செய்யப்பட்ட பெரிய குதிரை ஒன்றை அரசனின் முன் வைத்தான். உயிருள்ள குதிரை போலவே அது இருந்தது.
''பேரரசே! இது பறக்கும் குதிரை. இதில் அமர்ந்தால் வானத்தில் பறந்து செல்லலாம். உங்கள் பட்டத்துக் குதிரை ஓராண்டில் செல்லும் தொலைவை இது ஒரே நாளில் கடக்கும்'' என்றான் அவன். வியப்பால் கண்களை அகல விரித்த அரசன், நான் பார்த்த பொருள்களிலேயே மிகவும் அதிசயமான பொருள் இதுதான் என்றான். அந்த மூன்று பொருள்களையும் சோதித்துப் பார்த்தான். அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மை என்று அறிந்தான்.
''உங்கள் மூவரையும் போன்று சிறந்த அறிஞர்களை நான் பார்த்தது இல்லை. என்ன அருமையான கண்டுபிடிப்புகள். உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.
உடனே நிறைவேற்றி வைக்கிறேன்'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னான் அவன்.
''பேரரசே! இளவரசிகள் மூவரையும் எங்கள் மூவருக்கும் திருமணம் செய்து வையுங்கள். இதுவே நாங்கள் வேண்டும் பரிசு, என்று மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள். உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்றான் அரசன்.
''அமைச்சரே! காஜியாரை அழையுங்கள். இவர்களுக்கும் இளவரசிகளுக்கும் உடனே திருமணம் நிகழ வேண்டும்'' என்று கட்டளை இட்டான் அரசன்.
இளைய இளவரசி திரையை விலக்கினாள். தன் கணவனாக வரப் போவது யார் என்று பார்த்தாள். நரைத்த தாடி, மீசை, ஏராளமான கருக்கங்கள் விழுந்த முகம், பற்கள் பல இல்லாத வாய், கோரமான தோற்றம் கொண்ட கிழவன் அவள் கண்களுக்குத் தெரிந்தான்.
''இந்த அருவருப்பான கிழவன் என் கணவனா? இவனைப் பார்த்தால் எனக்குத் தூக்கமே வராதே. இவனுடன் வாழ்வதைவிட சாவதே மேல்'' என்று புலம்பிய அவள் அந்தபுரத்திற்கு ஓடினாள். படுக்கையில் விழுந்த அவள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள். (தொடரும்) |
| Last Updated on Thursday, 12 January 2012 22:33 |



